Sunday, October 31, 2010

அரபு சீமையிலே... - 23

சோதனையைக் கண்டு மனம்
வேதனையை அடையப் பெற்று,
ஜைதவரும் நபிகளிடம்,
வன்னெஞ்சை சபிக்க சொன்னார்!!!

காருண்யக் கடலாம் காத்தமுந்நபிகளோ,
‘நெறிப்படுத்தத் தரித்துள்ளேன்,
சாபமிட அல்ல,
அறியாமை இருளகல
பாபம்போம் மெல்ல,
ஒரு நாள் இம்மக்களெல்லாம்
நேர்வழியில் வருவார்கள்,
ஒரு காலும் வராவிட்டால்,
வழித்தோன்றல் வருவார்கள்! – என்
வறிய நிலை நீக்கிவிட
வல்லவனே போதுமப்பா!
உரிய பதில் அவன் தருவான்,
உண்மை என்றும் வெல்லுமப்பா!’
தளராத மனதோடு
தக்க பதில் தந்தநபி,
கண்ணிறைந்த நீரோடு,
கையிரண்டை ஏந்தியவர்
கருத்ததிலே கவலைகொண்டு
வல்ல இறையை வேண்டிநின்றார்.


இளைப்பாறி களைப்பாறி
முனைப்போடு தடுமாறி
முன்னெட்டு வைத்தவரும்
சின்னாட்கள் பயணப்பட,
சிரமங்கள் இருந்தாலும்
கருமத்தில் கண்ணாக,
இஸ்லாத்தின் தூததனை
இதமாக எடுத்தோத,
மண்ணினத்து ஜின்களெல்லாம்,
மறையோதி முறைதழுவ,
சீறாப்புதல்வரவர்,
ஹீரா குகையடைந்தார்.
வலக்கரமாய் இருந்ததனது
வளர்ப்புமகன் ஜைதவரை
திருமக்கா அனுப்பி வைத்து,
நிலவரத்தை அறியக் கண்டார்.

ஆதரிப்பார் யாருமில்லை
சோதரர்கள் தயவுமில்லை,
சோதனைகள் மலையளவு
சோர்ந்து நின்றார் நபியவர்கள்.

பகிஷ்காரப் பத்திரத்து
முத்திரையைப் பிய்த்தெறிந்த
முத்யிம் பின் அதீ அவர்கள்
முஸ்லிமாய் ஆகவில்லை,
ஆனாலும்,
நபியவரின் அறிய பண்பும்,
சபியாத நல்லுள்ளமும்
நேரிய மனமும் நேசத்துடன்
கூரிய மதியும் நோக்கியவர்,
தம்மிரு புதல்வர்கள் ஆயுதமேந்த,
உம்மிநபிக்கு அரணாக,
ஒட்டகையில் ஏற்றி காபா வந்து,
சட்டமாய் குரலுயற்றி, கூவுகிறார்,
‘அபயம் அளிக்கிறேன் அருமை நபிக்கு!
ஆதரவளிக்கிறேன் இன்று முதல்!’

இவர்தம்
கூற்றுதனைக் கேட்ட குறைஷிகளின்
கொக்கரிப்பு நின்றது!
ஆற்றலிழந்த நாவுகளும் கரங்களும்
தக்க பதில் தேடியது!!

அது முதலே,
முத்யிமுடனே தங்கி,
முதலோனைத் தொழுதழுதார்,
முஹமது ரசூல் நபியவர்கள் (ஸல்)!
ஆயினும் முத்யிமை குறைஷிகள்
இடித்துரைத்த காரணத்தால்,
இறையவன் பாதுகாப்பு
தனக்குப் போதுமென்று
ஈருலக ரட்சகனை நாடி நின்றார்.
நபி நாதர்.

பிரச்சாரத்தை
பகிரங்கமாய் செய்தார்,
சிலைவணக்க
வழிபாட்டை வைதார்,
இஸ்லாத்தை எத்தி வைக்கப்
பாடுபட்டார்.
ஏகத்துவப் பணிதனிலே
ஈடுபட்டார்.

(தொடரும்)

-சுமஜ்லா

2 comments:

THOPPITHOPPI said...

arumai!

Chitra said...

அருமை.... அடிக்கடி எழுதுங்க....